ஆசியாவில் உள்ள நான்கு நாடுகளில் அண்மையில் நடந்துள்ள இயற்கைப் பேரிடர்களில் மாண்டோர் எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது. மாறுபட்ட பருவநிலை, முழு இலங்கையிலும் இந்தோனீசியாவின் பல பகுதிகளிலும் பெருமழையை ஏற்படுத்தியுள்ளது. தென் தாய்லாந்தும் மலேசியாவும் கடந்த வாரம் அதேபோல் பெருவெள்ளங்களை எதிர்கொண்டன.
 
திங்கட்கிழமை வடசுமத்திராவுக்கு வருகைதந்த அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, மிகமோசமான நிலையைக் கடந்துவிட்டதாக நம்பிக்கை தெரிவித்தார்.
 
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களை எவ்வாறு சென்றடைவது என்பதுதான் அரசாங்கத்தின் முக்கிய இலக்காகத் தற்போது உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
நூற்றுக்கணக்கானோரை காணாத நிலையில் 442 பேர் இந்தோனீசியாவில் மரணமடைந்துள்ளனர். அதனால் தேசியப் பேரிடராக அறிவிக்கும்படி அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை, தனது நிவாரணப் பணிகளுக்கு வெளிநாடுகளின் உதவியை நாடியுள்ளது. ஆனால், இந்தோனீசியா, அவ்வாறு செய்யவில்லை.
 
மாறாக அதன் அரசாங்கம் மருத்துவ வசதிகளைக் கொண்ட மூன்று போர் கப்பல்களை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பியுள்ளது. அங்கு சாலைகள் மூலம் யாரையும் சென்றடைய முடியவில்லை.
 
புயல் கடுமையாகத் தாக்கியுள்ள இலங்கை, அனைத்துலக உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன் ராணுவ ஹெலிகாப்டர்களை மக்கள் உதவிநாடும் இடங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது. அங்கு 340 பேர் பலியாகியுள்ளனர்.
 
பலரைக் காணவில்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருவெள்ளத்தை அதிபர் அனுரா குமர திசநாயகே, தேசியப் பேரிடராக அறிவித்துள்ளார்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *