மும்பை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரும் 22ஆம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இனி ஜிஎஸ்டி வெறும் 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு நிலையில் மட்டும் தான் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி புதிதாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் கூடுதலாக 12 சதவீதம் டிக்கெட் விலை உயர்ந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இதனால் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் இனி 1400 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விலை குறையும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்து இருக்கின்றது. இதன் மூலம் ஒரு சர்வதேச போட்டிக்கான டிக்கெட் 1280 ரூபாய் இருந்தால் தற்போது பத்து சதவீதம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம் 1180 ரூபாய்க்கு விற்கப்படும். இதே போன்று 500 ரூபாய்க்கு கீழ் டிக்கெட் விலை இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி முழுவதும் கிடையாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விலை கணிசமாக குறைய போகிறது.
இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட் தற்போது அழிந்து வருவதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 500 ரூபாய்க்கு ஜிஎஸ்டி கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பதன் மூலம் டிக்கெட் விலையை 500 ரூபாய்க்கு விற்று அதிக அளவு பார்வையாளர்களை டெஸ்ட் போட்டிகளுக்கும் வர வைக்கலாம் என்று மகிழ்ச்சியில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் எப்படி வேண்டுமானாலும் ரசிகர்கள் வாங்கி விடுவார்கள். ஆனால் சர்வதேச போட்டிகளுக்கு வரி விதிப்பு குறைந்து இருப்பதன் மூலம் அது பெருமளவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தான் இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Nandri tamil.mykhel