துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோரின் பதில்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. அதிலும் இந்திய அணி குறித்த கேள்வி ஒன்றிற்கு சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேசினார்.
சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இந்த ஆசியக் கோப்பை தொடரிலும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள ‘ஃபேவரிட்’ அணியாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர் ஒருவர், “இந்திய அணி இந்தத் தொடரில் மற்ற அணிகளை விட வலுவான ஃபேவரிட் அணியாகப் பார்க்கப்படுகிறதே?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குச் சற்றும் தாமதிக்காமல், புன்னகையுடன் பதிலளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், நிருபரை மடக்கிக் கேள்வி கேட்டார். “யார் சொன்னது?” என்று சூர்யகுமார் கேட்ட மறுகேள்வி, அரங்கத்தில் இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 தொடர்ந்து பேசிய அவர், “யார் சொன்னது? நான் அப்படிக் கேள்விப்படவில்லையே. ஒரு அணியின் பயிற்சி தயாரிப்பு சிறப்பாக இருந்தால், களத்திற்குச் செல்லும்போது நிச்சயமாக நம்பிக்கையுடன் இருக்கலாம். ஆம், நாங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக விளையாடுகிறோம். ஆனால், நாங்கள் 3-4 நாட்களுக்கு முன்பே இங்கு வந்துவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் நல்ல நேரத்தைச் செலவிட்டோம். இந்தத் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்று சூர்யகுமார் பதிலளித்தார்.

பாகிஸ்தான் கேப்டனின் யதார்த்தமான பதில்

அதே கேள்வி பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், டி20 கிரிக்கெட்டின் தன்மையை சுட்டிக்காட்டி யதார்த்தமாகப் பதிலளித்தார். “டி20 கிரிக்கெட்டில், எந்த அணியையும் ஃபேவரிட் என்று நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில், நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும்” என்று அவர் கூறினார்.

முத்தரப்புத் தொடர் குறித்து சல்மான்

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான முத்தரப்புத் தொடரை பாகிஸ்தான் வென்றது. அந்தத் தொடரை வென்றாலும், ஆசியக் கோப்பையை வெல்லவில்லை என்றால் அதில் அர்த்தமில்லை என்று முன்பு சல்மான் கூறியிருந்தார். அதுகுறித்து செய்தியாளர் கேட்டபோது, அவர் லாவகமாக பதிலளித்தார். “ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான முத்தரப்புத் தொடர், ஆசியக் கோப்பைக்கான ஒரு தயாரிப்புதான். நாங்கள் அந்தத் தொடரை வெல்ல வேண்டியிருந்தது. ஒருவேளை நாங்கள் அதை வெல்லவில்லை என்றாலும், நாங்கள் இங்கு வந்து ஆசியக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றே நினைத்திருப்போம்” என்று சல்மான் குறிப்பிட்டார்.
nandri tamil.mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *