லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு பேட்டிங்கில் சவால் காத்திருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம்.
மேலும், பேட்டிங் செய்வதற்கு ஏற்றவாறு இருக்காது என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்காது என்பதால், இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்குமா? அல்லது ஒரு ஸ்பின்னருடன் களமிறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவர்கள் இருவருமே ஆல்ரவுண்டர்கள் தான் என்றாலும், பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய சூழலில், இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு முழு நேர பேட்ஸ்மேன் ஒருவர் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். அவர் வேகப்பந்து வீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். லார்ட்ஸ் மைதானமும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் அங்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே போல இந்திய அணியில் பும்ரா விளையாட இருப்பது சாதகமான அம்சமாக உள்ளது.
எனவே தான், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பேட்டிங்கில் அதிக ரன்களைச் சேர்த்தாலும், மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி நிச்சயமாக பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளத்தில் ஆடி இருக்கிறது.
ஆனால் மூன்றாவது போட்டி பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் நடக்கும். இதுதான் இந்திய அணிக்கு உண்மையான சவால். முதல் இரண்டு போட்டிகளிலும் ரன் குவித்த சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மூன்றாவது போட்டியில் எப்படி பேட்டிங் ஆடப் போகிறார்கள்? என்பதில் தான் இந்திய அணியின் வெற்றி இருக்கிறது.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11 – கே எல் ராகுல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ் / அர்ஷ்தீப் சிங்
Nandri tamil.mykhel