ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அண்மையில் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பல முன்னணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தரவரிசைப்பட்டியலிலும் பல வீரர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.
முதல் இடத்தில் பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (Jasprit Bumrah) முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்தார். இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி வெறும் 104 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சிலும் தனது அதிரடி தாக்குதலை வெளிப்படுத்திய பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
8 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து தென்னாப்பிரிகா வீரர் ரபாடா 2வது இடத்திலும், ஹேசில்வுட் 3வது இடத்திலும், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா முறையே 4, 7வது இடத்தில் உள்ளனர்.
அதிரடி மன்னன் ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது இன்னிங்சில் ரன் எதுவும் சேர்க்காத நிலையில், இரண்டாவது இன்னிங்சில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 161 ரன்கள் அடித்து எதிரணி பௌலர்களை அலறவிட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 2 இடங்கள் முன்னேறி பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் ரிஷப் பண்ட் (Rishabh Pant) 6வது இடத்திலும், முதல் போட்டியில் சதம் விளாசிய ரன்மெஷின் விராட் கோலி (Virat Kohli) 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
டெஸ்ட் ஆல் – ரவுண்டர்
ஆல் – ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 423 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 290 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அக்சர் படேல் 239 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
முதல் இடத்தில் இந்தியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship 2025) தொடரில் இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்திய அணி சிறந்த முன்னேற்றத்தை எட்டி உள்ளது.