இந்திய – அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைக்கோள், இன்று மாலை 5:40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV – F16 மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. பூமியை உற்று நோக்கி புரிந்து கொண்டு, புவியியல் மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்த, வரலாற்று சிறப்புமிக்க இந்திய – அமெரிக்க கூட்டணியில், பலமடங்கு திறன் மிகுந்த செயற்கைக்கோளாக, வடிவமைக்கப்பட்டுள்ளது நிசார்.

NASA-ISRO Synthetic Aperture Radar என்பதன் சுருக்கம் தான் ‘NISAR’… பூமியின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, மிகவும் துல்லியமாக கண்காணிப்பதே நிசாரின் முக்கிய நோக்கம். ஒரு சென்டி மீட்டர் அளவிலான மிகச்சிறிய அசைவையும் நிசார் படம் பிடிக்கும். நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலைச் செயல்பாடுகள் மற்றும் பனிப்பாறை மாற்றங்கள் போன்ற இயற்கையின் மாற்றங்களையும், நகர விரிவாக்கம், வேளாண் வளர்ச்சி, உள்கட்டமைப்பு அழுத்தங்கள் போன்ற மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க இது மிக முக்கியமானது.

சுமார் 2,392 கிலோ எடை கொண்ட நிசார்செயற்கைக்கோள், பூமி முழுவதையும் ஸ்கேன் செய்து கொண்டே இருக்கும். இரவையும் பகலையும், அனைத்து வானிலையிலும் ஸ்கேன் செய்து, 12 நாட்களுக்கு ஒருமுறை தரவுகளை வழங்கும். இதன் மூலம் புவியின் மேற்பரப்பில் நேரிடும் மாற்றம் உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும். மேலும், கடல் மற்றும் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கடற்கரை கண்காணிப்பு, புயல் வகைப்பாடு, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீராதாரங்களின் வரைபடம், கண்காணிப்பு, மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாடுகளும் இதில் அடங்கும்.

நிசாரில் உள்ள இரட்டை அதிர்வெண் ரேடார் அமைப்பு தான், அதன் தனித்துவம். இது விண்வெளியிலேயே முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசா வழங்கியுள்ள ‘எல்’பேண்ட் ரேடார், தாவரங்களிலும் மண்ணுக்குள்ளும் ஊடுருவி, மேற்பரப்புக்கு கீழே நிகழும் மாற்றங்களை வெளிப்படுத்தும். இஸ்ரோ வழங்கியுள்ள ‘எஸ்’ பேண்ட் ரேடார், நிலப்பரப்பின் அம்சங்களையும் கண்டறிய உகந்ததாக உள்ளது.

இந்த ரேடார்கள், ஒரு பள்ளிப்பேருந்தின் அளவிலான 12 மீட்டர் வலை பிரதிபலிப்பு ஆன்டெனாவில் பொருத்தப்பட்டுள்ளன.10,790 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள நிசார் மூலம், பேரிடர்கால நிலவியல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை மிகத் துல்லியமாக கண்காணிக்க முடியும். நிசாரை விண்ணில் ஏவுவதன் மூலம், புவிசார் அறிவியலில் இந்தியா மிகப் பெரிய சாதனை படைக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Nandri puthiyathalaimurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *