kamal

டெல்லி: கமல்ஹாசன் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு வலியுறுத்தியிருந்தது. இந்த அமைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கமல் தயாரிப்பில், அவர் நடித்து வெளியான திரைப்படம்தான் ‘தக் லைஃப்’. இந்த திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கமல்ஹாசன் பேசியிருந்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

“தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது” என்று கமல் கூறியிருந்தார். கன்னட அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மட்டுமல்லாது, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை திரையிட முடியாது என்று மிரட்டின. இந்த மிரட்டல்கள் காரணமாக கர்நாடகாவில் திரைப்படம் வெளியாகவில்லை. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஷ் ரெட்டி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு சார்பில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில், “தக் லைஃப் திரையிட கர்நாடகாவில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. வெளியீட்டாளர்கள் திரையிட்டால் முழு பாதுகாப்பு கொடுக்க மாநில அரசு தயார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நீதிபதிகள் வரவேற்றனர். அதே நேரம், தங்கள் உணர்வுகள் புன்படுவதாக கூறி சில கும்பல்கள் கலைப்படைப்புகளை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாத என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகியிருந்த கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பின் வழக்கறிஞரை பார்த்து, “திரைப்படத்துக்கு அதிகாரப்பூர்வமற்ற தடையை ஆதரிக்கிறீர்களா? திரையரங்குகளை எரிப்பதை ஆதரிக்கிறீர்களா? உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், “மொழி என்பது உணர்வு பூர்வமான விஷயம். நடிகர் மன்னிப்பு கேட்டால் திரைப்படத்தை திரையிடலாம். இல்லை என்றால் நிலைமை மோசமாகும்” என்று கூறினார். உடனே டென்ஷனான நீதிபதிகள், “இதில் மன்னிப்பு கேட்க என்ன இருக்கிறது? சட்டத்தை கையில் எடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்களுக்கு விருப்பமில்லாத கருத்துக்களால் நீங்கள் பாதிக்கப்பட்டால், அவதூறு வழக்கு தொடருங்கள்” என்று கறாராக கூறினர். இதனால் பதட்டமடைந்த வழக்கறிஞர், “எந்த சூழ்நிலையிலும் வன்முறையை ஆதரிக்கவில்லை” என்று உறுதியளித்தார். இதையடுத்து கர்நாடகாவில் திரைப்படம் திரையிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

Nandri tamil.oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *