டபுள் டெக்கர் பாலம் வந்தாச்சு! பெங்களூரு மெட்ரோவின் சூப்பர் ஐடியா டிராபிக் குறைக்க!
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு அடுக்கு பாலம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கள ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் அதிகரிக்கும் டிராபிக்
பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் சுரங்க சாலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் நிர்வாகம் டபுள் டெக்கர் ஐடியாவை கையில் எடுத்துள்ளது. அதாவது, ஏற்கனவே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள ரூட்டில் வாகனங்கள் இயக்கும் வகையில் உயர்மட்ட பாலத்தை சேர்த்து கட்டமைக்கவுள்ளனர்.
டபுள் டெக்கர் மேம்பாலம் – நம்ம மெட்ரோ ஐடியா
இதன்மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் நடந்து விட்டால் டோல் கட்டணம் கூட செலுத்த தயாராக இருக்கிறோம். நாங்கள் விரைவாக பயணிக்க வழி ஏற்படுத்தி தந்தால் மட்டும் போதும் என்று வாகன ஓட்டிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டபுள் டெக்கர் பாலத் திட்டம் எந்த வழித்தடத்தில் அமைக்கப்படுகிறது என்ற கேள்வி எழக்கூடும். இதுபற்றி விசாரிக்கையில், ஜே.பி.நகர் 4வது பேஸ் முதல் ஹெப்பல் வரையிலும், ஹொசஹள்ளி முதல் கடபகெரே வரையிலும் அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஹெப்பம் மற்றும் ஹொசஹள்ளி ரூட்டில் நடவடிக்கை

இதில் ஜே.பி.நகர் 4வது பேஸ் முதல் ஹெப்பல் வரையிலான 28.4 கிலோமீட்டர் தூரத்திற்கு 7,2013 கோடி ரூபாயும், ஹொசஹள்ளி முதல் கடபகெரா வரையிலான 8.6 கிலோமீட்டர் தூரத்திற்கு 2,489 கோடி ரூபாயும் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் 37 கிலோமீட்டர் தூரம் வருகிறது. இதன் மொத்த மதிப்பு 9,692 கோடி ரூபாயாக உள்ளது. இது பெங்களூரு மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட திட்டத்தின் கீழ் வருகிறது.
பெங்களூருவின் மிக நீளமான டபுள் டெக்கர் பாலம்
இந்த டபுள் டெக்கர் பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் பெங்களூரு நகரிலேயே மிக நீளமானது என்ற பெருமையை பெறும். ஒரு மார்க்கத்தில் இரு வழிச் சாலை என மொத்தம் நான்கு சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த மேம்பாலத்தில் முக்கிய ஜங்ஷன்களில் இருந்து நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் பிரத்யேக இணைப்பு சாலைகள் அமைக்கப்படும்.
அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இதற்காக 9,692 கோடி ரூபாயை செலவிட பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாராகி உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு 261 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் கணக்கிட்டுள்ளனர்.
ஹைதராபாத் நிறுவனம் ஆய்வறிக்கை ஏற்பாடு
இதை சாத்தியப்படுத்தும் வகையில் முதல்கட்ட ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி ஹைதராபாத்தை சேர்ந்த ஆர்வீ இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இவர்கள் குறிப்பிட்ட வழித்தடத்தில் டபுள் டெக்கர் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரிக்கவுள்ளனர். பின்னர் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சமர்பிக்கவுள்ளனர்.
Nandri tamil.samayam
