சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் சலுகை டிக்கெட் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், புற நகர் ரயில்களில் பயன்படுத்தும் டிஜிட்டல் செயலியான Chennai One- செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கிவைத்தார். Chennai One- செயலி மூலம் ஆட்டோ, வாடகை கார்களையும் முன்பதிவு செய்து பயன்படுத்தலாம். அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை, சென்னை ஒன் செயலியை 5.5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், சுமார் 8 லட்சம் டிக்கெட்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொதுப் போக்குவரத்து மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒன் செயலி பயன்படுத்துவோருக்கு ஒருமுறை பயன்படுத்தும் வகையில் கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை ஒன் செயலி மூலம் ஒரு ரூபாய் கட்டணத்தில், பேருந்து அல்லது மெட்ரோ ரயில் அல்லது புறநகர் ரயில்களில் ஒரே ஒரு டிக்கெட்டை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சலுகையை ஒருமுறை பயன்படுத்தி பயணித்த பிறகு, தொடர்ந்து வரும் பயணங்களுக்கு வழக்கமான கட்டணங்களை செலுத்த வேண்டும் என சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணைய உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னைக்கான ஒரே முழுமையான தினசரி பயண செயலி “Chennai One” செயலி, இப்போது, பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணிக்க BHIM Payments App அல்லது Navi UPI வழியாக பணம் செலுத்தும் பயணிகளுக்கு வெறும் ரூ.1 க்கு டிக்கெட் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் – அனைவரும் டிஜிட்டல் மற்றும் பணமில்லா (cashless) போக்குவரத்தை முயற்சிக்க ஊக்குவிப்பதாகும். இந்த செயலி சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாதத்திலேயே 5.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள், 14 லட்சம் பயண தேடல்கள், 8.1 லட்சம் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.
பயணிகள் இந்த செயலியின் சுத்தமான வடிவமைப்பு, ஒரு QR குறியீட்டின் மூலம் பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்கள் மற்றும் காப் ஆகியவற்றை ஒரே இடத்தில் திட்டமிடுதல், பணம் செலுத்துதல், கண்காணித்தல் ஆகிய வசதிகளைப் பாராட்டியுள்ளனர். “ஒரு நகரம், ஒரு செயலி, ஒரு டிக்கெட்” என்ற உறுதி தற்போது பயனர்களிடையே மகிழ்ச்சியையும் தாராள ஏற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“சென்னை ஒன் செயலி, நமது நகரின் போக்குவரத்தை வேகமான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொருந்தியதாக மாற்றுகிறது. ரூ.1 சலுகையின் மூலம், பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே செயலியில் ஒரே கட்டண முறையில் பயணிக்க முடியும். இது தினசரி பயணத்தை எளிதாக்கி, டிஜிட்டல் பணப்பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி.”
ரூ.1 டிக்கெட் பெறுவது எப்படி:
1. Chennai One செயலியை திறந்து (அல்லது பதிவிறக்கி), பயண இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
2. BHIM Payments App அல்லது Navi UPI மூலம் ரூ.1 செலுத்தவும்.
3. வெற்றிகரமாக டிக்கெட் பெறலாம்.
இந்த சலுகை ஒரு முறை பயணத்திற்கே பொருந்தும். மற்ற சலுகைகளுடன் இணைக்க முடியாது. ஒருமுறை வெற்றிகரமாக பயணித்த பிறகு, தொடர்ந்து வரும் பயணங்களுக்கான வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
nandri tamil.news18
