கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் வழக்கு விசாரணை தொடங்கும்போது வழக்கறிஞர்கள் மோதிக்கொண்டனர். இருதரப்பினருக்கும் இடையே நீதிமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீதிபதி சுவ்ரா கோஷ் பலமுறை எச்சரிக்கை செய்தார். ஆனாலும் அவர்கள் கேட்காததால் கோபமான நீதிபதி சுவ்ரா கோஷ் அங்கிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை போல் விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகளை மம்தா பானர்ஜி தொடங்கி உள்ளார்.
பிரசாந்த் கிசோர் தொடங்கிய ‛ஐ-பேக்’ எனும் தேர்தல் வியூக நிறுவனம் மம்தா பானர்ஜிக்கு வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளது. தற்போது பிரசாந்த் கிசோர் வெளியேறி அரசியல் கட்சியை தொடங்கி உள்ளதால் அந்த நிறுவனம் இயக்குநர் பிரதீக் ஜெயின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பிரதீக் ஜெயின் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் நேற்று அமலாக்கத்துறையினர் நுழைந்து சோதனை நடத்தினர். இதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். மம்தா பானர்ஜி நேரில் சென்று சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை அமலாக்கத்துறை மூலமாக பாஜக அறிய விரும்புகிறது என்று குற்றம்சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் தான் மம்தா பானர்ஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‛நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஐ-பேக் அலுவலகத்திலும், அதன் தலைவர் பிரதீக் ஜெயினின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜி தலையீடு செய்தார். இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
அதேவேளையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில், ‛‛அமலாக்கத்துறை ரெய்டின்போது பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப வழங்க வேண்டும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தங்கள் தேர்தல் வியூகத்தைத் திருடவே பாஜக அமலாக்கத்துறையை தவறான வகையில் பயன்படுத்துகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் மீது இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது. மேற்கு வங்க அரசியலில் இந்த வழக்கு முக்கியானது. இதனால் ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குவிந்தனர். சுவ்ரா கோஷ் விசாரணைக்கு தயாரானார். ஆனால் இடநெருக்கடி ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு நீதிமன்றத்துக்குள் நுழைந்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது வழக்குடன் தொடர்பு இல்லாத வழக்கறிஞர்கள் 5 நிமிடத்தில் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நான் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவேன் என்று எச்சரித்தார். ஆனாலும் வழக்கறிஞர்கள் வெளியேறாமல் இருந்தனர். ஒவ்வொருவரும் இன்னொருவரையும் வெளியேற்ற முயன்றனர்.
இதனால் கூச்சல் குழப்பம் நீடித்தது. கோபமான சுவ்ரா கோஷ் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனால் அமலாக்கத்துறை மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை ஜனவரி 14ம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
Nandri oneindia
